பர்மிங்ஹாம்: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவாரா என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து வருகிறது.
‘ஆண்டர்சன் சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், நாளை (ஜூலை 2) இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து ஆடும் லெவன்: ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.
ஆர்ச்சர் இல்லை: இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.
பும்ரா விளையாடுகிறாரா? – பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா விளையாடுகிறாரா என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே உள்ளது. அவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது எந்தப் போட்டி என தெரிவிக்கப்படவில்லை. முதல் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். அதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் இன்னும் இரண்டில் தான் அவர் விளையாடுவார்.
அவருக்கு வொர்க் லோடை குறைக்கும் நோக்கில் இந்த விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இந்த தொடரில் பின்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அவர் விளையாடாத பட்சத்தில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தப் போட்டியில் விளையாடும் என தகவல்.