சிட்னி: இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். காயம் காரணமாக கம்மின்ஸ் இதில் விளையாடாத நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அணியை மிட்செல் மார்ஷ் கேப்டனாக வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அண்மையில் அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா. அதிலிருந்து மீண்டு வந்து இந்த தொடரில் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டும். காயம் காரணமாக ஓய்வில் உள்ள கம்மின்ஸுக்கு பதிலாக ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியை மார்ஷ் வழிநடத்துகிறார். இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் மிட்செல் ஸ்டார்க் விளையாடுகிறார்.
ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதோடு முதல் 2 டி20 போட்டிகளுக்கான அணியையும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
இந்தத் தொடரில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரரான ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா இந்த தொடரில் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார்.