நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் 0-3 ஒயிட் வாஷ், ஆஸ்திரேலியாவில் 1-3 உதை, இடையில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி என்று கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு கடும் ஆட்டம் கண்டு வந்தது, இப்போது இங்கிலாந்தில் தொடரைச் சமன் செய்ததில் கம்பீரின் மதிப்பு சற்றே உயர்ந்துள்ளது. ஆனாலும் டெஸ்ட் அரங்கில் கம்பீர் அனுபவமற்ற பயிற்சியாளரே என்கிறார் தினேஷ் கார்த்திக்.
பேட்டிங் கடைசி வரை வேண்டும் என்று கம்பீர் இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ்வை உட்கார வைத்தது நம்மூர் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, கவாஸ்கர் மட்டுமல்லாது உலக முன்னாள் வீரர்களான மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங், இயன் ஹீல் உட்பட யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. பேட்டிங்கில் டெப்த் கேட்கும் கம்பீர் பவுலிங்கில் அதே போல் டெப்த் கேட்காதது ஏன், இந்த ஏரியாவில்தான் கம்பீர் கொஞ்சம் சீரியஸாக யோசிக்க வேண்டும் என்கிறார் தினேஷ் கார்த்திக்.
ஆங்கில ஊடகப் பேட்டி ஒன்றில் தினேஷ் கார்த்திக் கூறும்போது, “இங்கு கம்பீருக்கு நியூஸிலாந்துக்கு எதிராக மிகவும் மோசமான தொடராகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் மோசமான தொடரே. இப்போது இங்கிலாந்து தொடரில் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் கம்பீர் என்றே உணர்கிறேன்.
இந்த அணி அவரே தேர்ந்தெடுத்த அணி. இளம் அணி. ஷுப்மன் கில்லுடன் அணியின் உந்துசக்தியாக கம்பீர் இருக்கிறார். ஒன்றே ஒன்று கம்பீர் சீரியஸாக யோசிக்க வேண்டியது எதிரணியினரின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான பந்து வீச்சுக் கூட்டணியைக் கட்டமைத்தலே. பேட்டிங்கில் எப்படி கடைசி வரை ஆட வேண்டிய அணி வேண்டும் என்று நினைக்கிறாரோ பந்துவீச்சையும் அவர் அவ்வாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கம்பீர் வெள்ளைப்பந்தில் பயங்கரமான கோச், சாதனைகள் நம் கண் முன்னால் உள்ளன. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கம்பீர் அனுபவம் இல்லாதவர். உள்நாட்டு போட்டி அனுபவமும் அவருக்குப் பயிற்சியாளராக இருந்ததில்லை. ஓய்வறையில் வீரர்களிடம் என்ன மாதிரியான மொழியில் அவர் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. ஆனால் இளம் வீரர்களிடம் தீப்பொறி பறக்கின்றது.
தோல்வியைத் தவிர்க்கும் அணியைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. இப்போது அவர் வழியில் அவர் வந்து விட்டார், அவர்தான் இனி அனைத்திற்கும் பொறுப்பு. நன்றாக ஆடினால் அவருக்குப் பெருமை. அப்படி ஆடவில்லையா அவர் நேர்மையாக கைகளை உயர்த்தி ஆம், நாம் தவறு செய்து விட்டோம் என்று கூற வேண்டும். இந்த இங்கிலாந்து தொடரில் வீரர்கள் போட்ட முயற்சியை அவர் பெருமையுடன் பார்க்க வேண்டும்.” என்றார் தினேஷ் கார்த்திக்.