பர்மிங்காம்: பர்மிங்காமில் இங்கிலாந்து அணியை 336 ரன்களில் வீழ்த்தி அசத்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா இப்போது சமன் செய்துள்ளது. இந்த தொடரில் இன்னும் 3 போட்டிகள் விளையாட வேண்டி உள்ளது.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 2-ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆகின. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 180 ரன்கள் முன்னிலை உடன் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றிக்கான இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இன்று 5-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆலி போப் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரது விக்கெட்டை ஆகாஷ் தீப் 5-ம் நாளின் தொடக்கத்திலேயே கைப்பற்றினார். பின்னர் 6-வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
73 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் வீசிய சுழலில் ஸ்டோக்ஸ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். மதிய உணவு நேர பிரேக்குக்கு பிறகு கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோரது விக்கெட்டையும் இந்தியா கைப்பற்றியது. டங் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். இறுதியாக கார்ஸ் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள்.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்து வீச்சாளர்களில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இங்கிலாந்து அணி 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 336 ரன்களில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஜடேஜா, கே.எல்.ராகுல், ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு இது முதல் வெற்றி. இந்த போட்டியில் ஷுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 430 ரன்கள் எடுத்தார். சிராஜ் (6 + 1) மற்றும் ஆகாஷ் தீப் (4 + 6) என இருவரும் இணைந்து இந்த போட்டியில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.