பர்மிங்காம்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350+ ரன்களை கடந்துள்ளது. ஹாரி புரூக் மாற்று ஜேமி ஸ்மித் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு வலுவான கூட்டணி அமைத்து அந்த அணியை காத்துள்ளனர்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நேற்று இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நிலையில் இருந்து இன்றைய ஆட்டத்தை தொடங்கியது. ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர்.
3-ம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய சிராஜ், ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். அப்போது அந்த அணி 84 ரன்கள் எடுத்திருந்தது. அந்த இக்கட்டான தருணத்தில் இருந்த போதும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி சதம் கடந்தார். மறுமுனையில் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹாரி புரூக்கும் சதம் கடந்தார்.
முதல் செஷனில் 172 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. தொடர்ந்து இரண்டாவது செஷனில் விக்கெட் இழப்பின்றி 28 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் மற்றும் ஸ்மித் தற்போது 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்துள்ளனர். இருவரும் தற்போது 150+ ரன்களை கடந்துள்ளனர்.
முன்னதாக, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷூப்மன் கில் 269 ரன்கள் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.