லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜோ ரூட் சதம் விளாசினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23, ஆலி போப் 44. ஹாரி புரூக் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோரூட் 99, பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஜஸ்பிரீத் பும்ரா வீசிய முதல் பந்தை கல்லி திசையில் பவுண்டரி அடித்த ஜோ ரூட் தனது 37-வது சதத்தை நிறைவு செய்தார். 192 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் அவர், இந்த சதத்தை கடந்தார். அவருக்கு உறுதுணையாக பேட் செய்து வந்த பென் ஸ்டோக்ஸ் 110 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ராவின் அற்புதமான பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் ஜோடி 184 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தது.
அடுத்த சில ஓவர்களில் ஜோ ரூட் 199 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே சிறந்த நீளத்தில் பும்ரா வீசிய பந்தை, ஜோ ரூட் டிரைவ் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது. அடுத்த பந்தில் கிறிஸ் வோக்ஸை ரன் ஏதும் எடுக்காத நிலையில் பெவிலியனுக்கு திருப்பினார் பும்ரா.
ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பும்ரா வீசிய பந்தை அரை மனதுடன் கிறிஸ் வோக்ஸ் விளையாட முயன்றார். அப்போது பந்து மட்டையில் உரசியபடி விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் ஆனது. அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 87.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களாக இருந்தது. எஞ்சிய 3 விக்கெட்களையும் இந்திய அணி விரைவாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஜோடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றது.
விரைவாக ரன்கள் சேர்த்த ஜேமி ஸ்மித் 52 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் தனது 6-வது அரை சதத்தை கடந்தார். மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 105 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்கு பின்னர் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. 114 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முகமது சிராஜ் பிரித்தார்.
ஜேமி ஸ்மித் 56 பந்துகளில், 51 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் 4 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். கடைசி விக்கெட்டுக்கு ஷோயப் பஷிர் களமிறங்க பிரைடன் கார்ஸ் மட்டையை சுழற்றினார். அதிரடியாக விளையாடிய அவர், 77 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது முதல் அரை சதத்தை அடித்தார்.
விரைவாக ரன்கள் சேர்த்த பிரைடன் கார்ஸ் 83 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் போல்டானார். முடிவில் இங்கிலாந்து அணி 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ராகுல் அரைசதம்: இதையடுத்து பேட் செய்தது இந்திய அணி. 43 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்திலும், கருண் நாயர் 40 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்திலும், கேப்டன் ஷுப்மன் கில் 16 ரன்களில் வோக்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 53, ரிஷப் பந்த் 19 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா 242 ரன்கள் பின்தங்கியுள்ளது.
லார்ட்ஸில் ஹாட்ரிக் சதம்: இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சதம் விளாசினார். இந்த மைதானத்தில் அவருக்கு இது ஹாட்ரிக் சதமாக அமைந்தது. லார்ட்ஸில் கடந்த இரு ஆட்டங்களிலும் ஜோ ரூட் முறையே 143, 103 ரன்கள் விளாசியிருந்தார். இந்த வகையில் இதற்கு முன்னர் ஜேக் ஹாப்ஸ் (1912-26), மைக்கேல் வாகன் (2004-05) ஆகியோரும் லார்ட்ஸ் மைதானத்தில் ஹாட்ரிக் சதம் அடித்திருந்தனர்.
5-வது இடத்தில் ஜோ ரூட்: இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது 37-வது சதத்தை அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் ராகுல் திராவிட், ஸ்டீவ் ஸ்மித் (தலா 36 சதங்கள்) ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் (51), ஜேக் காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் (41), குமார் சங்கக்கரா (38) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
2-வது நாளில் ரிஷப் பந்த் இல்லை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் முதல் நாள் ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா வீசிய 34-வது ஓவரின் போது லெக் திசையில் சென்ற பந்தை டைவ் அடித்து பிடிக்க முயன்ற போது காயம் அடைந்தார். இடது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்த அவர், அதன் பின்னர் களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பதிலி விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் களமிறங்கினார். 2-வது நாளான நேற்றும் ரிஷப் பந்த் களத்துக்கு வரவில்லை. இதனால் துருவ் ஜூரலே விக்கெட் கீப்பிங் பணியை தொடர்ந்தார்.
தப்பித்த ஜேமி ஸ்மித்: ஜேமி ஸ்மித் 5 ரன்களில் இருந்த போது முகமது சிராஜ் பந்தில் 2-வது சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை கே.எல்.ராகுல் தவறவிட்டார். இந்த வாய்ப்பை ஜேமி ஸ்மித் சரியாக பயன்படுத்திக் கொண்டு அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
11-வது முறை அவுட்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா பந்து வீச்சில் ஜோ ரூட் ஆட்டமிழப்பது இது 11-வது முறையாகும்.
10 ஓவர்களில் பந்து சேதம்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 80.2-வது ஓவரில் இந்திய அணி 2-வது புதிய பந்தை எடுத்தது. முதல் நாள் ஆட்டத்தில் 83 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா விரைவாக 3 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் 90.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பந்தின் வடிவம் மாறியது. இதனால் வேறு பந்து மாற்றப்பட்டது.
10 ஓவர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்ட பந்தை தேர்வு செய்து அதை நடுவர்கள் இந்திய அணியிடம் வழங்கினார்கள். ஆனால் மாற்றப்பட்ட பந்து புதிய பந்து போன்று தோற்றமளிக்கவில்லை. இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், நடுவரிடம் முறையிட்டார். ஆனால் களநடுவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதன் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சில் தொய்வு ஏற்பட்டது.