Last Updated : 19 Jul, 2025 06:04 AM
Published : 19 Jul 2025 06:04 AM
Last Updated : 19 Jul 2025 06:04 AM

துபாய்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்தாம்டனில் நடைபெற்றது. இதில் 259 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 18-வது ஓவரின் போது இந்திய தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல், ஒரு ரன் எடுப்பதற்காக ஓடிய போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு வீராங்கனையான லாரன் ஃபைலரின் தோளை இடித்தார்.
தொடர்ந்து அடுத்த ஓவரில் சோஃபி எக்லெஸ்டோன் வீசிய பந்தில் பிரதிகா ராவல் போல்டானார். ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிச் செல்லும் போது சோஃபி எக்லெஸ்டோனையும், பிரதிகா ராவல் இடித்துச் சென்றார். இது ஐசிசி நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் இந்த விவகாரத்தில் பிரதிகா ராவலுக்கு போட்டியின் ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதியிழப்பு புள்ளியையும் தண்டனையாக வழங்கியுள்ளது.
அதேவேளையில் இந்த ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டததற்காக இங்கிலாந்து அணிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (19-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
FOLLOW US
தவறவிடாதீர்!