லண்டன்: ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய பவுலர் சிராஜ். இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். 1,113 பந்துகளை இந்தத் தொடரில் வீசியுள்ளார். அது அவரது அசாத்திய உடல் உழைப்புக்கும், கிரிக்கெட் மீதான ஆர்வத்துக்கும் சான்றாகும்.
கிரிக்கெட் உலகில் இப்போது சிராஜ் குறித்த டாக் வைரலாக உள்ளது. அதிலும் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் ஓவலில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ‘இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை’ என்ற நிலையிலும் அவர் மல்லுக்கட்டிய விதம் அற்புதம். அதுதான் பலரையும் ஈர்த்துள்ளது.
இந்தப் போட்டி முழுவதும் மாரத்தான் ஸ்பெல்களை சிராஜ் வீசி இருந்தார். அணியின் பவுலிங் யூனிட்டில் இடம்பெற்றுள்ள அனுபவ வீரர். தான் பந்து வீசுவதோடு நிற்காமல் மற்ற பவுலர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டிய நிலை அவருக்கு. இப்படி பல்வேறு டாஸ்குகளை சமாளித்து ஓவல் போட்டியில் இந்திய அணியை சிராஜ் வெற்றி பெற செய்துள்ளார்.
அதுவும் இங்கிலாந்தின் கைவசம் 4 விக்கெட்டுகளும் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற சுலப நிலையில், அது அவர்களுக்கு அவ்வளவு சுலபமல்ல என தனது பந்து வீச்சு மூலம் சிராஜ் நிரூபித்தார். கிடத்தட்ட ஆடுகளத்தை எதிரணி வீரர்களுக்கு படுகளமாக மாற்றி இருந்தார். அதுவும் 5-ம் நாள் ஆட்டத்தில் 25 பந்துகள் வீசி இங்கிலாந்தின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இங்கிலாந்து அணி இருந்தது. அந்தச் சூழலில் கடைசி விக்கெட்டான அட்கின்சனை போல்ட் செய்து இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப் பறித்தார்.
ஓவல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்ஸில் 30.1 ஓவர்கள் வீசி, 104 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஸாக் கிராவ்லி, ஆலி போப், ஸ்மித், ஓவர்டன், டங் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 16.2 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன் மூலம் இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பை முதல் இன்னிங்ஸில் தடுத்தார். அந்த இன்னிங்ஸில் ஆலி போப், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தல் மற்றும் ஹாரி புரூக் விக்கெட்டை கைப்பற்றினார்.
நழுவவிட்ட வாய்ப்பு டூ வெற்றி: ஓவல் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஹாரி புரூக் சதம் விளாசினார். அவர் 19 ரன்கள் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் பிடித்திருந்தார். இருப்பினும் அவர் பவுண்டரி லைலை கடந்து சென்று விட்ட காரணத்தால் அது சிக்ஸர் ஆனது. பின்னர் புரூக் 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் பிடித்து வெளியேற்றி இருந்தார் சிராஜ். அதோடு இந்திய அணியை த்ரில் வெற்றி பெறவும் செய்தார்.
அவரை இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாது எதிரணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரும் பாராட்டி உள்ளனர். அவர்கள் எல்லோரும் சொல்வது போல தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் சிராஜின் குணாதிசயம். தேசத்துக்காக களத்தில் நூறு சதவீத உழைப்பை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பும் வீரர்களில் அவர் ஒருவர். அதுதான் இந்திய அணிக்கு ஓவலில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. ஓவல் டெஸ்ட்டின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்கள் வீழ்த்திய முகமது சிராஜ்தான் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
‘டிஎஸ்பி’ சிராஜ்: நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விளையாட்டுத்துறையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சிராஜுக்கு கடந்த ஆண்டு ‘டிஎஸ்பி’ பணி வழங்கி கவுரவித்தது தெலங்கானா அரசு. அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் டிஎஸ்பியாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் ‘டிஎஸ்பி’ சிராஜ் என ரசிகர்களால் அழைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.