நாட்டிங்காம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது. ஸாக் கிராவ்லி 124, பென் டக்கெட் 140, ஜோ ரூட் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ஆலி போப் 169, ஹாரி புரூக் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 96.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆலி போப் 171, ஹாரி புரூக் 58, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜேமி ஸ்மித் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசாராபானி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி, முதல் இன்னிங்ஸில் 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் கிரேய்க் இர்வின் 42, சீன் வில்லியம்ஸ் 25, சிக்கந்தர் ராஸா 7, வெஸ்ஸி மாதவரே 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனது 2-வது சதத்தை அடித்த தொடக்க வீரரான பிரையன் பென்னட் 139 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஃபாலோ-ஆன் விளையாட இங்கிலாந்து அணி நிர்பந்தித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்தது. தற்போது ஜிம்பாப்வே அணி 270 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் மூன்றாவது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது ஜிம்பாப்வே.