பர்மிங்காம்: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 2-ம் தேதி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 87, ஜடேஜா 89, வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இணைந்து 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புரூக் 158 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் போல்ட் ஆனார். பின்னர் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டையும் ஆகாஷ் தீப் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார். கார்ஸ், ஜாஸ் டங், ஷோயப் பஷீர் என மூவரையும் அவர் டக் அவுட் செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் 184 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகியிருந்தனர்.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 மற்றும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 180 ரன்கள் முன்னிலை உடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் சுமார் 18 ஓவர்களை இந்திய அணி விளையாடுகிறது.