மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன்முறையாக டி20 கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சோபியா டங்க்லி 22, டாமி பியூமாண்ட் 20, ஆலிஸ் கேப்ஸி 18 ரன்கள் சேர்த்தனர். பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சாரணி, ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
127 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 32, ஷபாலி வர்மா 31, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 26, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்கள் சேர்த்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-1 என கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இருதரப்பு டி20 தொடரை இந்திய அணி வெல்வது இதுவே முதன்முறையாகும். 2006-ம் ஆண்டு டெர்பியில் நடைபெற்ற ஒரே ஒரு டி20 போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன் பிறகு இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒவ்வொரு டி20 தொடரிலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோல்விகளையே சந்தித்து வந்திருந்தது. தற்போதுதான் முதன்முறையாக டி20 தொடரை தன்வசப்படுத்தி உள்ளது.
இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி நாளை (12-ம் தேதி) பர்மிங்காமில் நடைபெறுகிறது.