பர்மிங்காம்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார். அதேவேளையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்கள் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 83 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 427 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 161, ரவீந்திர ஜடேஜா 69, ரிஷப் பந்த் 65, கே.எல் ராகுல் 55 ரன்கள் சேர்த்தனர்.
608 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 16 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 0, பென் டக்கெட் 25, ஜோ ரூட் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆலி போப் 24, ஹாரி புரூக் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கைவசம் 7 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 536 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி எதிர்கொண்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் மழை காரணமாக மாலை 5.05 மணிக்குதான் தொடங்கப்பட்டது. இதனால் வழக்கமான 90 ஓவர்களுக்கு பதிலாக 80 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என அறிவிக்கப்பட்டது.
பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆலி போப் 50 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் ஹாரி புரூக்கை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் ஆகாஷ் தீப். 31 பந்துகளை எதிர்கொண்ட ஹாரி புரூக் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்தார். 83 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்த ஜேமி ஸ்மித் சீராக ரன்கள் சேர்த்தார்.
நிதானமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 73 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.
ஜேமி ஸ்மித் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 32 பந்துகளில், 7 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். மட்டையை சுழற்றிய ஜேமி ஸ்மித் 99 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஜோஷ் டங்க் 29 பந்துகளில், 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் முகமது சிராஜின் அற்புதமான கேட்ச்சால் நடையை கட்டினார். கடைசி வீரராக பிரைடன் கார்ஸ் 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பர்மிங்காம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் இங்கு இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்திருந்தது. தற்போதுதான் முதன்முறையாக இந்திய அணி வெற்றியை ருசித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது இந்திய அணி. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.