கிறிஸ் வோக்ஸ் எங்கள் ஆஷஸ் தொடருக்கான திட்டத்திலேயே இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராபர்ட் கீ தெரிவித்ததையடுத்து மனமுடைந்த கிறிஸ் வோக்ஸ் தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அனைத்து 3 வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக ஆடியவர் கிறிஸ் வோக்ஸ், கடைசியாக இந்திய அணிக்கு எதிராக கை உடைந்த நிலையிலும் மட்டையைத் தூக்கிக் கொண்டு ட்ரா செய்யும் போராட்டத்தில் களமிறங்கி தன் தைரியத்தையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தியவரை ராபர்ட் கீ ஏதோ ஒரு விதத்தில் அவமதித்து விட்டதாகவே இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
இப்படித்தான் பாவம்! பென் ஃபோக்ஸ் என்ற விக்கெட் கீப்பர் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து இங்கிலாந்துக்காக துணைக்கண்ட பிட்ச்களில் ஆடினார். அவரையும் பாஸ்பால் நெட்வொர்க் இப்படித்தான் அவமதித்தது. இப்போது கிறிஸ் வோக்ஸ். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இப்படித்தான் கறிவேப்பிலையாக வீரர்களைப் பயன்படுத்தும் என்பது அந்தக்காலத்திலிருந்தே தடம் காணக்கூடிய ஒன்றுதான்.
இன்று 62 டெஸ்ட், 122 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 33 டி20 போட்டிகளை இங்கிலாந்துக்காக ஆடி இன்று திரையை மூடிவிட்டார் கிறிஸ் வோக்ஸ்.
“இந்தத் தருணம் வந்து விட்டது என்று முடிவெடுத்தேன். குழந்தைப் பருவத்திலிருந்தே இங்கிலாந்துக்காக ஆட வேண்டும் என்பதே தீரா வேட்கை. என் கனவுகளை நான் வாழ்ந்தததில் நான் அதிர்ஷ்டக்காரன் தான். இங்கிலாந்தை பிரதிநிதித்துவம் செய்வது, 3 சிங்கங்களை அணிந்தது, களத்தில் சகாக்களுடன் 14 ஆண்டுகள் ஆடியது. இவர்களில் பலர் என் ஆயுட்கால நண்பர்கள். யோசித்துப் பார்க்கும் போது மிகப்பெருமையாகத்தான் உணர்கிறேன்.
2011-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனது ஏதோ நேற்று நடந்தது போல் உள்ளது. ஆனால் காலம் பறக்கிறது. இரண்டு உலகக்கோப்பை வெற்றியில் பங்கு பெற்றேன். சில அற்புதமான ஆஷஸ் தொடர்களில் ஆடியிருக்கிறேன். இது சாத்தியம் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அந்த நினைவுகளும் சக வீரர்களுடன் கொண்டாடிய தருணங்கள் என் நெஞ்சை விட்டு என்றென்றும் நீங்காது.
என் தந்தை, தாய், மனைவி ஏமி என் மகள் லைலா மற்றும் ஈவி உங்களின் அன்பு, ஆதரவு மற்றும் தியாகத்திற்கு நன்றிகள். பயிற்சியாளர்கள், சக வீரர்கள், இங்கிலாந்து மற்றும் என் கவுண்டி அணியான வார்விக் ஷயரில் பின்னணியிலிருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
கவுண்டி கிரிக்கெட்டிலும் சாத்தியமானால் தனியார் டி20 லீகுகள் வாய்ப்பையும் எதிர்நோக்குகிறேன்.” இவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசினார் வோக்ஸ். இப்போது அவருக்கு வயது 36.
பாஸ்பால் யுகத்தில் 2023 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-2 என்று பின் தங்கியிருந்த நிலையில் 2-2 என்று டிரா செய்ய இவரது பங்களிப்பு அபரிமிதமானது, இதனால் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். ஆனால் ஓவரில் தோள்பட்டை காயத்துடன் அவர் போன போது அவர் அறிந்திருக்கவில்லை நம் எதிர்காலமும் இதோடு முடியும் என்று.
இங்கிலாந்துக்காக அனைத்து வடிவங்களிலும் 396 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2019 உலகக்கோப்பை தொடரில் அணியின் பிரதான பந்து வீச்சாளரே கிறிஸ் வோக்ஸ்தான், இங்கிலாந்து உலகக்கோப்பையை முதன் முதலில் வென்ற போது கிறிஸ் வோக்ஸ் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது. ஒரு நாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளை சாய்த்தார். 2022 டி20 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியிலும் கிறிஸ் வோக்ஸ் முக்கியமான வீரராகத் திகழ்ந்தார்.