லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்வையிட சென்றார். அப்போது ஆடுகள வடிவமைப்பாளரான லீ ஃபோர்டிஸ், கவுதம் கம்பீரிடம் 2.3 மீட்டர் விலகி நின்று ஆடுகளத்தை பார்வையிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கவுதம் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்பதை நீங்கள் சொல்லக்கூடாது. அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் வெறும் ஒரு மைதான ஆடுகள் வடிவமைப்பாளர். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று பதிலடி கொடுத்தார்.
இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “லீ ஃபோர்டிஸ் நடந்துகொண்ட விதம் தேவை இல்லாதது. இதற்கு முன்னர் எங்களுக்கு இப்படி நடந்தது இல்லை. குறைவான ஸ்பைக்குள் கொண்ட ஷு அல்லது வெறும் கால்களுடன் ஆடுகளத்தை அருகில் இருந்து பார்வையிட அனுமதி உண்டு.
இது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பணி. இப்படி இருக்கும் போது லீ ஃபோர்டிஸ் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. ஆடுகளத்தை அருகில் இருந்து பார்வையிடுவதற்கு பயிற்சியாளருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதில் எந்த தவறும் இல்லை” என்றார்.