குமி: 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவின் குமி நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 43 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை. அதேவேளையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் கலந்துகொள்கிறார். இந்தியாவில் இருந்து அனுபவம் குறைந்த சச்சின் யாதவ், யஷ்விர் சிங் பங்கேற்கின்றனர்.
தொடக்க நாளான இன்று காலை 8 மணிக்கு ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் பதக்க போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து செர்வின் செபாஸ்டியன், அமித் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
செபாஸ்டியன் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உத்தராகண்ட் தேசிய விளையாட்டில் பந்தய தூரத்தை 1:21:23 விநாடிகளில் கடந்திருந்தார். இதுவே அவரது சிறந்த செயல் திறனாக உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்திய ஓபன் நடை பந்தயத்தில் இலக்கை 1:21:47 விநாடிகளில் எட்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
அமித்தின் சிறப்பான செயல்திறன் 1:21:52 நிமிடங்களாக உள்ளது. இதை அவர், கடந்த ஏப்ரல் மாதம் சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் கடந்திருந்தார்.
நடை பந்தையத்தை தொடர்ந்து டிராக் அண்ட் பீல்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மகளிருக்கான ஈட்டி எறிதலில் பதக்க போட்டி நடைபெறுகிறது. இதில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் அன்னு ராணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. 2023-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் அன்னு ராணி 4-வது இடம் பிடித்திருந்தார். அவரது சிறந்த செயல் திறன் 63.82 மீட்டராக உள்ளது. இதை அவர், 2022-ம் ஆண்டு போட்டியில் எறிந்திருந்தார். நடப்பு சீசனில் அன்னுராணியின் சிறந்த செயல் திறன் 58.82 ஆக உள்ளது.
காலை 9.40 மணிக்கு நடைபெறும் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஜெய் குமார், விஷால் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில் 10.20 மணிக்கு நடைபெறும் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ரூபால் சவுத்ரி, வித்தியா ராம்ராஜ் கலந்துகொள்கின்றனர்.
மாலை 4.20 மணிக்கு ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயம் நடைபெறுகிறது. இதில் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற இந்தியாவின் குல்வீர் சிங், சவான் பர்வார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த சீசனில் அவரது குல்வீர் சிங்கின் சிறந்த செயல் திறன் 27:00.22 வினாடிகளாக உள்ளது.
தொடர்ந்து ஆடவருக்கான உயரம் தாண்டுதல் தகுதி சுற்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷோரே பங்கேற்கிறார். ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் யூனுஷ் ஷா கலந்து கொள்கிறார். டிரிம்ப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபுபக்கர் பங்கேற்கின்றனர். இதில் அப்துல்லா அபுபக்கர் நடப்பு சாம்பியனாக உள்ளார்.
ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் பங்கேற்கும் அவினாஷ் சேபிள், மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் பங்கேற்கும் பாருல் சவுத்ரி, 100 மீட்ட தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் ஜோதி யார்ராஜி ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
கடைசியாக பாங்காக்கில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 27 பதக்கங்கள் வென்றிருந்தது.
தமிழக வீரர், வீராங்கனைகள்: தென் கொரியாவில் இன்று தொடங்கும் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் (டிரிபிள் ஜம்ப்), செர்வின் செபாஸ்டியன் (20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), தமிழரசு (4×100 மீட்டர் தொடர் ஓட்டம்), ராகுல் குமார் (4×100 மீட்டர் தொடர் ஓட்டம்),
விஷால் (4×100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 4×400 கலப்பு தொடர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (4×100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 4×400 கலப்பு தொடர் ஓட்டம்), வித்யா ராம்ராஜ் (400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), அபிநயா (4×100 மீட்டர் தொடர் ஓட்டம்), சுபா (4×100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 4×400 கலப்பு தொடர் ஓட்டம்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.