ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி சிறப்பாக விளையாடி ஜப்பான் அணியைத் தோற்கடித்தது.
பிஹார் மாநிலம் ராஜ்கிரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய, ஜப்பான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தினர்.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் 5, 46-வது நிமிடங்களில் கோலடித்தார். இந்திய வீரர் மன்தீப் சிங் 4-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். ஜப்பான் தரப்பில் கொசெய் கவாபே 38, 59-வது நிமிடங்களில் கோலடித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதும் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.