ராஜ்கிர்: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிரில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள 3 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீனாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய அணி சமீபத்தில் விளையாடிய புரோ லீக் தொடரின் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி அடைந்திருந்தது. இந்த 8 ஆட்டங்களிலும் இந்திய அணியின் டிபன்ஸ் பலவீனமாக இருந்தது. இதனால் 26 கோல்களை இந்திய அணி வாங்கியிருந்தது. பெனால்டி கார்னர்களை கோல்களாக மாற்றுவதிலும் இந்திய அணி தடுமாறியிருந்தது.
இது ஒருபுறம் இருக்க கோல்கீப்பர்களான கிருஷ்ணன் பகதூர் பதக் வான்வழி பந்துகளை சமாளிப்பதிலும், சூரஜ் கர்கேரா நெருக்கடியின் போது சிறப்பாக செயல்படுவதிலும் தடுமாறுகின்றனர். இவற்றுக்கு இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும்.