வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது, இந்த சீசனில் அங்கு பிட்ச்கள் எப்படி இருக்கும், பனிப்பொழிவு குறித்து முன்னாள் பிட்ச் கியூரேட்டர் டோனி ஹெம்மிங் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
டோனி ஹெம்மிங் 2007 முதல் 2017 வரை தலைமை கியூரேட்டராகப் பணியாற்றியுள்ளார். அதாவது இந்தப் பத்தாண்டுகள் காலக்கட்டத்தில் ஐசிசி சர்வதேச அகாடமி, துபாய் சர்வதேச ஸ்டேடியம் ஆகியவற்றில் பிட்ச் தயாரிப்பைக் கண்காணித்தவர் டோனி ஹெம்மிங்.
அவர் அளித்த பேட்டியில், “துபாய் மைதானத்தில் 7 பிட்ச்கள் உள்ளன, இந்த ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தினோம். ஆசியக் கிரிக்கெட்டுக்கு ஆசிய மண் தேவை என்று உணர்ந்தோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை கணிக்கக் கூடியதாக இருந்தது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெப்பம் கடுமையாக உயரும். பிறகு இலையுதிர்காலம், வசந்த காலம் இரண்டிலும் சவால் அதிகம் ஏனெனில் அப்போதுதான் தூசிப்புயல் அடிக்கத் தொடங்கும்.
இந்த ஆசியக் கோப்பைக்கான பிட்ச்கள் கடந்த 2 ஆண்டுகளை வைத்துப் பார்த்தால் புற்கள் இருக்காது ஏனெனில் கிரிக்கெட் தவிர மற்ற பயன்பாடுகளுக்கும் இந்த மைதானம் உரித்தாகிறது. ஆனால் இப்போது கடந்த 2 வாரங்களாக பிட்சில் புற்கள் இருக்கிறது. ஆகவே கடந்த 2 ஆண்டுகள் போல் இல்லாமல் பந்துகள் கொஞ்சம் வேகமாகவும் எழும்பியும் வரும் வாய்ப்பு உள்ளது. பந்துகள் மட்டைக்கு நன்றாகவே வரும்.
செப்டம்பரில் காற்றின் ஈரப்பதம் 60 முதல் 80 சதவீதம் இருக்கும். எனவே இரவு வேளைகளில் 38 டிகிரி செல்சியஸிலிருந்து வெப்பம் 28 டிகிரி செல்சியஸாகக் குறையும். அதனால் வானிலை மாற்றம் ஏற்பட்டு பனிப்பொழிவு இருக்கும்.
பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முதலில் ஆட்ட நாளன்று மைதானத்தில் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. அதற்கு 48 மணி நேரம் முன்னதாக நீர் பாய்ச்சலாம். போட்டி நடைபெறும் நாளில் காலையில் பனிப்படிவுத்-தடுப்பான் அதாவது, பனிப்படிவைத் தடுக்க அல்லது குறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பொருள், பூச்சு அல்லது படலம், இது அழுத்தப்பட்ட நீராவி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
துபாய், அபுதாபி இரண்டுமே பாகிஸ்தான் மண் தான். வித்தியாசம் என்னவெனில் புற்கள்தான். துபாய் பிட்சில் இந்த முறை புற்கள் அதிகம் இருக்கும். அபுதாபி பிட்சில் சுமாரான சமமான புற்கள் பரவலாக இருக்கும்.
ஒரு அணி 20 ஓவர்களில் 200 ரன்களை எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சேசிங்கில் பவுலர்கள் கிராஸ் சீம் பந்துகளையே வீசுவார்கள் என்றால் பந்தின் ஷைனிங் பகுதியில் பட்டு கொஞ்சம் பவுன்சுடன் வேகமாகச் செல்லும். தையலில் பட்டால் பந்து சற்றே நின்று வரும். ஆகவே புதிய பந்தில் ஆரம்பத்தில் நல்ல ‘கேரி’ இருக்கும். 10 ஓவர்கள் கழித்து பந்து மென்மையாகி பிட்சில் பந்துகள் பிடித்து நின்று வரும். அப்போது பனிப்பொழிவு இருக்கும், பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் ஏற்படும். பிட்சில் தண்ணீர் தெளித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பனிப்பொழிவு என்பதும். பனிப்பொழிவில் பிட்சின் தன்மை மாறவே செய்யும்.
பனிப்பொழிவில் பந்துகள் தன்மையும் மாறும் எனவே தான் சேசிங் சுலபமாகி விடுகிறது. மேலும் பொதுவாக டி20 போட்டிகள் என்றாலே பந்துகள் ஸ்விங் ஆகக்கூடாது, ஸ்பின் ஆகக்கூடாது என்றுதான் தொடர் ஏற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர். பேட்டிங் பிட்ச்கள்தான் என்பது ஐசிசி வழிகாட்டுதலாகும்.” என்றார்.
இந்திய முன்னாள் வீரர் ராபின் சிங், “கடும் வெயில் என்பது உறுதி. எனவே முதலில் பவுலிங் செய்வது பாதுகாப்பானது. பிட்ச்கள் பிரெஷ் ஆக இருக்கும் புற்கள் இருக்கும். கடும் வெயிலில் பிட்ச்கள் பிளந்து விடக்கூடாது என்பதற்காக துபாய், அபுதாபியில் பிட்சை பகலில் கவர் செய்து விடுவார்கள், ஆட்டத்திற்கு முன்பு பிட்ச் கவரை எடுக்கும் போது பிட்ச் வியர்த்து விட்டிருக்கும். புற்களில் ஈரப்பதம் இருக்கும். ஆகவே முதலில் பந்து வீசுவதுதான் சிறந்தது. பேட்டிங் பிட்ச்தான் என்றாலும் முதலில் பேட் செய்யும் அணிகளுக்கு நிச்சயம் சவால் கூடுதல்தான் ஆகவே சேசிங் தான் சிறந்த தேர்வாக இருக்க முடியும்.