இஸ்லாமாபாத்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடைபெறும். இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் செப். 28-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்தும்.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் செப்டம்பர் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்தான், 19-ம் தேதி ஓமன் அணிகளுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்(பிசிபி) இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. ஏனெனில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்களில் பாபர் அசமும், முகமது ரிஸ்வானும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் அசம் 18-வது இடத்தையும், ரிஸ்வான் 20-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு இறுதியில் இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தனர். இந்நிலையில் டி20 வடிவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இருவருக்கும் அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை என்பது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்: சல்மான் அலி அகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், பஹர் ஸமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸான், சஹீப் ஸாதா ஃபர்ஹான், சல்மான் மிர்ஸா, ஷாஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் மொகிம்.