மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனத்துடன் விளையாட வைத்து வருகிறது.
இந்த சூழலில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல். தேர்வுக்குழுவின் வசம் இதை பும்ரா தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பும்ரா விளையாடி இருந்தார். அதேபோல கடந்த 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிதான் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய கடைசி போட்டி.
இந்த சூழலில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பும்ரா திரும்பும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் காயம் காரணமாக பும்ரா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் செவ்வாய்க்கிழமை அன்று அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு கூடவுள்ளது. அப்போது ஆசிய கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை: ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி அன்று இரு அணிகளும் துபாயில் நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன.