துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது சூப்பர் 4 கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து இருந்தது. முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், கடைசி லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை 21 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வீழ்த்தியிருந்தது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்திருந்தது. ஓமன் அணியை 93 ரன்கள் வித்தியாசத்திலும், ஐக்கிய அரபு அமீரக அணியை 41 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. லீக் சுற்றின் போது இந்திய அணி டாஸ் போடும் போதும், போட்டி முடிவடைந்த பின்னரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.
இந்த நிலையை இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்திலும் தொடரக்கூடும். ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மீண்டும் களமிறங்க உள்ளனர். இதனால் பந்து வீச்சு வலுவடையும்.
அக்சர் படேல் பீல்டிங்கின் போது தலை பகுதியில் காயம் அடைந்திருந்தார். எனினும் அவர், நலமுடன் இருப்பதாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். லீக் சுற்று போன்றே இம்முறையும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு துறை பாகிஸ்தான் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த சஞ்சு சாம்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும்.
டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா சிறந்த பார்மில் உள்ளார். ஷுப்மன் கில்லும் மட்டையை சுழற்றும் பட்சத்தில் அதிரடி தொடக்கம் கிடைக்கும். நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருகாலத்தில் கணிக்க முடியாத அணியாக திகழ்ந்த பாகிஸ்தான் அணி தற்போது திறன் குறைந்து காணப்படுகிறது. பேட்டிங்கில் அந்த அணி வீரர்கள் சுழற்பந்து வீச்சை கணித்து விளையாடுவதில் தடுமாறி வருகின்றனர். பஹர் ஸமான் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடிய பேட்ஸ்மேனாக உள்ளார். தொடக்க வீரரான சைம் அயூப் இரு ஆட்டங்களில் டக் அவுட் ஆகி உள்ளார். எனினும் பந்து வீச்சில் அவர், கைகொடுத்து வருகிறார்.
சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹசன் நவாஸ் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான பேட்டிங் திறன் வெளிப்படவில்லை. இவர்களை விட பின்வரிசையில் வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் ஷா அப்ரிடி தனது அதிரடியால் மட்டை வீச்சில் அணிக்கு ஓரளவு கைகொடுத்து வருகிறார். அணியை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும்.