மும்பை: இந்திய டி20 அணியில் மீண்டும் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (ஆக.19) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளது.
ஸ்ரேயஸ் மற்றும் ஜிதேஷ் என இருவரும் ஐபிஎல் 2025 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்திய டி20 அணியில் ஸ்ரேயஸ் ஐயர் கடைசியாக கடந்த 2023 டிசம்பரில் விளையாடி இருந்தார். ஜிதேஷ் சர்மா கடந்த 2024 ஜனவரியில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் இருவரும் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயிற்சியின் கீழ் 15 டி20 போட்டிகளில் 13 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. டி20 பார்மெட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான துபாய் ஆடுகளத்தில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்களின் அனுபவம் மிகவும் அவசியம்.
அதை கருத்தில் கொள்ளும் போது ஸ்ரேயஸ் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. அவர் விளையாடினால் ஷிவம் துபே அல்லது ரிங்கு சிங் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு இருக்காது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த தொடரில் இந்தியா விளையாடிய போட்டிகள் அனைத்தும் அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதே போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா, துருவ் ஜுரேலுக்கு மாற்றாக அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் அணியில் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட வாய்ப்புள்ளது. அவருக்கு துணையாக ஜிதேஷ் சர்மா அணியில் இடம்பெறுவார் என தகவல்.
நாளை நடைபெறும் தேர்வுக்குழு கூட்டத்தின் டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் பங்கேற்கிறார். அவரது கருத்துக்கும் இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா தயார் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் அவரை விளையாட வைத்து இந்திய அணி பலப்பரீட்சை மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பும்ரா விளையாடாத பட்சத்தில் பிரசித் கிருஷ்ணாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இதேபோல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பந்துவீச்சாளர்களில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் நிச்சயம் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.