துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான் அணி. வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 135 ரன்களே சேர்த்த போதிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி கொடுத்தனர்.
குறிப்பாக ஷாகின் ஷா அப்ரீடி பேட்டிங்கில் 13 பந்துகளில் 19 ரன்களும், பந்து வீச்சில் 17 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் நாளை (28-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது பாகிஸ்தான் அணி. வங்கதேச அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது, “இதுபோன்ற ஆட்டங்களில் வெற்றி பெறுவதற்கு, நாங்கள் ஒரு சிறப்பு அணியாக இருக்க வேண்டும்.
அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். பேட்டிங்கில் சில முன்னேற்றம் தேவை. நாங்கள் அதற்காக உழைப்போம். தற்போதைய வெற்றியால் உற்சாகமாக இருக்கிறோம். இறுதிப் போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எந்த அணியையும் வெல்லும் அளவுக்கு நாங்கள் சிறந்த அணியாக உள்ளோம். இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த முயற்சி செய்வோம்” என்றார்.