துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை செய்கிறது.
துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெறுகின்ற அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இந்நிலையில், இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 31, முகமது நவாஸ் 25 ரன்கள் எடுத்தனர். 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. இருப்பினும் எதிரணிக்கு சற்று சவால் தரக்கூடிய ரன்களை ஸ்கோர் செய்தது. வங்கதேச பந்து வீச்சாளர்களில் டஸ்கின் அகமது 3, மெஹதி ஹசன் மற்றும் ரிஷாத் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. ஷாஹின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் பந்து வீச்சு வங்கதேச அணிக்கு சவாலாக அமைந்தது. இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சயிம் அயூப் 2 மற்றும் முகமது நவாஸ் 1 விக்கெட் கைப்பற்றினர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது வங்கதேசம். இதன் மூலம் 11 ரன்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச தரப்பில் ஷமீம் ஹுசைன் 30 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு ஆறுதல் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறி உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்கின்றன. இந்த தொடரில் மூன்றாவது முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று என இந்த தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.