மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும் என ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி அன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்ற எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
இது குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் விக்கெட் கீப்பர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடனான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறட்டும். நாம் ஆசிய கோப்பையை வெல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியா இதில் பங்கேற்பதன் மூலம் அது பொருளாதார ரீதியாக தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளுக்கு பலன் தரும் என கருதுகிறேன்.
இந்த தொடரில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி விளையாட முடிவு செய்தால் அது ஒட்டுமொத்த தேசத்தையும் கோபம் கொள்ள செய்யும்” என அவர் கூறியுள்ளார்.