ஆசியாவில் இந்தியாவுக்குப் பிறகு சிறந்த அணி ஆப்கானிஸ்தான் தான் என்ற அடையாளம் எங்கள் மேல் மற்றவர்கள் ஏற்றிக் கூறுவது. நாங்கள் அவ்வாறு கூறிக்கொள்ளவில்லை என்று கேப்டன் ரஷீத் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அசத்தினார்கள். ஆனால் அரையிறுதியில் இவர்கள் நுழையும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தன் அதிரடி இரட்டைச் சதம் மூலம் தகர்த்தார். கேட்ச்களை விட்டு கிளென் மேக்ஸ்வெல்லை அன்று செய்ய முடியாததைச் செய்ய வைத்தது ஆப்கானிஸ்தான்.
2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குள் நுழைந்தனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றனர். இதனையடுத்து ஆசியாவில் இந்திய அணிக்குப் பிறகு ஆப்கன் தான் என்று ஊடகத்தில் சில தரப்பினர் பிராண்ட் செய்தனர். இந்த அடையாளத்தை மறுத்த ரஷீத் கான் கூறியதாவது:
ஊடகங்களில் எங்களை ஆசியாவின் 2-வது சிறந்த அணி என்று எங்களை அழைக்கின்றனர். நாங்கள் அப்படி எங்களைக் கூறிக்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் நாங்கள் நன்றாக ஆடியதை வைத்து இந்த அடையாளத்தை எங்கள் மீது ஏற்றியுள்ளனர். ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் சிலவற்றில் பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வீழ்த்தினோம். அதனால்தான் 2வது சிறந்த அணி என்ற அடையாளம் ஏற்பட்டது.
எதிர்காலத்தில் நாங்கள் சரியாக ஆடவில்லை எனில் அந்த எண் 2-வதாக இருக்காது. அது 3, 4, 5, 6 என்று இறங்கியபடியேதான் செல்லும். நாங்கள் எங்களுக்கே அந்த அடையாளத்தைக் கொடுத்துக் கொள்ளவில்லை.
நாங்கள் எப்போதும் அன்றைய தினத்தில் சிறப்பாக ஆடவே முயற்சி செய்கிறோம், அணிகளை வீழ்த்த ஆசைப்படுகிறோம். சில வேளைகளில் நன்றாக ஆடுவோம் சில வேளைகளில் ஆடுவதில்லை, இவையெல்லாம் ஆட்டத்தில் சகஜமே. ஆனால் நன்றாக ஆட வேண்டும் என்பது மனதில் நீங்காமல் ஆணித்தரமாக இருக்க வேண்டும்.” என்றார்.
சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20-யில் இலங்கை, வங்கதேச அணிகளிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது இந்த ‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி’ என்பது குறிப்பிடத்தக்கது.