எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கான ஆட்ட நாயகன் விருதை ஷுப்மன் கில் தனது அசாத்தியமான 430 ரன்களால் தட்டிச் சென்றிருக்கலாம். ஆனால், உண்மையில் இது போன்ற மட்டைப் பிட்சில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றியை இந்திய அணிக்கு உறுதி செய்தவர் ஆகாஷ் தீப் என்னும் அற்புதன்.
இந்த வெற்றியையும், 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் சகோதரிக்கு அர்ப்பணித்துள்ளார் ஆகாஷ் தீப். ஆகவே வரிசையாக ரத்தச் சொந்தங்களின் இழப்புகளின் நெடுந்துயரம் மனதை அழுத்தும் ஒரு சூழ்நிலையிலிருந்து ஆகாஷ் தீப் இன்று நாடு போற்றும் ஹீரோவாக உயர்வு பெற்றுள்ளார்.
இப்போது வர்ணனையாளராக இருக்கும் செடேஷ்வர் புஜாராவிடம் தான் தன் சகோதரிக்கு இதை அர்ப்பணிப்பதாகக் கூறினார் ஆகாஷ் தீப். புஜாராவின் தாயார் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தவர். ஆகவே ஒருவரது துயரம் இன்னொருவருக்கு நன்றாகப் புரியக்கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆகாஷ் தீப் தன் தந்தையை ஸ்ட்ரோக்கிற்கு இழந்தார். இந்தத் துயரத்திற்கு 2 மாதங்களுக்குப் பிறகு ஆகாஷ் தீப்பின் சகோதரர் ஒருவருக்கு சாதாரண சளிதான் பிடித்திருந்தது. இவர் இருந்த எந்த வசதியுமில்லாத ஒரு டவுனில் சகோதரருக்கு என்ன நோய் என்று சரியாகக் கணிக்க முடியவில்லை. வாரணாசிக்கு கொண்டு வரும் வழியில் சகோதரனின் உயிரும் பிரிந்தது.
ஆகாஷ் தீப் மிகச்சாதாரண குடும்பத்தில் ஒரு கிரிக்கெட் சங்கம் கூட இல்லாத மாநிலத்தில்தான் பிறந்தார். ஆம்! பிஹார் தெஹ்ரியில் தான் பிறந்தார் ஆகாஷ் தீப். பிஹாரின் சசாரமில்தான் வளர்ந்தார். இவரது தந்தை இவரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கவில்லை. அவர் மேற்கு வங்கத்தின் துர்காப்பூருக்கு 2010-ல் வந்தார். அவர் தந்தையிடம் சொன்னது, வேலைக்காகச் செல்வதாக. ஆனால் அங்கு தன் மாமாவின் உதவியுடன் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார்.
அப்போதான் அடுத்தடுத்து தந்தை, அண்ணனின் அகால மரணம் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடக்கியது. 3 ஆண்டுகளுக்கு இவரால் கிரிக்கெட் ஆட முடியவில்லை. ஆனால் விடாமுயற்சியுடன் கொல்கத்தா சென்று 2ம் டிவிஷன் லீக் கிரிக்கெட்டில் ஆடினார். அங்குதான் முகமது ஷமியைச் சந்தித்தார். இவரது பந்து வீச்சு ரன்-அப், ஓடி வருவது, ஹை ஆர்ம் ஆக்ஷன், ரிலீஸ் எல்லாமே ஷமி போலவே மாறிவிட்டது, இவர் இப்போது ஷமிக்கான சரியான மாற்று என்று பார்க்கப்படுகிறார். இரண்டாவது முதல் தரப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளைக் குஜராத்திற்கு எதிராக எடுத்தார். பெங்கால் அணி ரஞ்சி இறுதிப் போட்டிகுத் தகுதி பெற்ற அந்த சீசனில் ஆகாஷ் தீப் 35 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
வெள்ளைப்பந்திலும் தீரராகத் திகழ 2021-ல் ஆர்சிபி இவரை ஐபிஎல் தொடரில் ஆட ஒப்பந்தம் செய்தது. 2023-ல் ரஞ்சியில் பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு வந்ததில் ஆகாஷ் தீப்பின் பங்களிப்பு அபரிமிதமானது 41 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிறகு துலீப் டிராபி ஆடினார், இந்தியா ஏ அணியுடன் தென் ஆப்பிரிக்கா சென்றார், பிறகு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில்தான் கோச் ராகுல் திராவிட் கையில் இந்திய தொப்பியைப் பெற்று ராஞ்சியில் அட்டகாசமான ஓப்பனிங் ஸ்பெல்லை வீசி அசத்தினார்.
எட்ஜ்பாஸ்டனில் இவர் வரும்போது பும்ராவே இல்லை இவர் என்ன செய்து விடப்போகிறார் என்ற எண்ணமும் ஐயங்களும் பலருக்கும் இருந்தது. ஆனால் இவர் உள்நாட்டில் இதே போன்ற மட்டைப் பிட்ச்களில்தான் வீசி விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார், வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்பது இங்கிலாந்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. பிட்சில் ஒன்றுமில்லைதான். ஆனால், அதற்காக அடி வாங்கிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியுமா, வைட் ஆஃப் த கிரீஸ் டெக்னிக்கை பயன்படுத்தி பந்தை உள்ளேயும் வெளியேயும் ஸ்விங் செய்து இங்கிலாந்து பாஸ்பால் பேட்டர்களை நிலைகுலையச் செய்தார்.
இதோடு இங்கிலாந்து பவுலர்களுக்கும் இந்தப் பிட்சில் எப்படி வீச வேண்டும் என்ற பாடத்தையும் எடுத்தார் ஆகாஷ் தீப். பார்டர் கவாஸ்கர் டிராபியிலேயே கிடைத்த வாய்ப்பில் அட்டகாசமாக வீசினார் ஆகாஷ் தீப், ஏகப்பட்ட பீட்டன்கள், நியர் எட்ஜ்கள் என்று அதிர்ஷ்டமில்லாமல் போனார். ஸ்டீவ் ஸ்மித் இவரது பந்து வீச்சைக் குறிப்பிட்டு பாராட்டினார்.
இங்கிலாந்தில், பர்மிங்ஹாமில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்த 2வது பவுலர் ஆகியுள்ளார் ஆகாஷ் தீப். அன்று புஜாராவுடன் பேசும்போது ‘என் சகோதரி முகத்தில் புன்னகையைப் பார்க்க வேண்டும் அவ்வளவே’ என்றார். நிச்சயம் புற்றுநோய் அவஸ்தைகளுக்கு இடையில் ஆகாஷ் தீப்பின் சகோதரி புன்னகைத்திருப்பார்.
ஒரு அட்டகாசமான பவுலர் கிடைத்திருக்கிறார், இவரைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டியது பிசிசிஐ-யின் கடமை.