அகமதாபாத்: இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் நாளை (ஜூன் 2) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அறிமுக அணியான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ், சீசன் 3 சாம்பியனான ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் யு மும்பா, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணியுடன் மோதுகிறது. அகமதாபாத் EKA அரங்கில் நடைபெறும் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. மேலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
ஒலிம்பியன்களான அருணா குவாட்ரி மற்றும் அட்ரியானா டயஸ் ஆகியோருடன் இந்தியாவின் 18 வயது துடிப்பான வீரர் அங்கூர் பட்டாச்சார்ஜியுடன் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ், தங்கள் அறிமுக சீசனில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய அளவில் சிறந்த நிலையில் உள்ளது. அருணா குவாட்ரி உலகத் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ளார். 5-வது முறையாக அவர், யுடிடி தொடரில் விளையாடுகிறார். நடப்பு சீசனில் அவர், ஆடவர் பிரிவில் உயர்தரவரிசை வீரராக உள்ளார். அட்ரியானா டயஸ் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ளார். 2018-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக யுடிடி தொடருக்கு திரும்பி வந்துள்ள அவர், மகளிர் பிரிவில் டாப்ரேங்கில் 2-வது இடத்தில் உள்ளார்.
இருப்பினும், அனைவரின் பார்வையும் முந்தைய சீசனின் மறுக்க முடியாத கண்டுபிடிப்பான அங்கூர் பட்டாச்சார்ஜி மீது இருக்கும். 5-வது சீசினில் அவர், 5 போட்டிகளில் 4-ல் வெற்றி கண்டிருந்தார். அதாவது போட்டியிட்ட 15 ஆட்டங்களில் 10-ல் வெற்றி கண்டிருந்தார். அவரது வெற்றி சராசரி 66.67 ஆக இருந்தது. இது சீசன் 5-ல் இரண்டாவது சிறந்த செயல் திறன் ஆகும்.
ஸ்டாலியின் சென்னை லயன்ஸ் அணியில் முன்னாள் இளையோர் தரவரிசையில் முதலிடம் வகித்த பயாஸ் ஜெயின், அனுபவமிக்க சர்வதேச நட்சத்திரங்களான ஃபேன் சிகி மற்றும் கிரில் ஜெராசிமென்கோ உள்ளனர். சீனாவைச் சேர்ந்த ஃபேன் சிகி நடப்பு சீசனுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்தார். மேலும், சீனாவில் இருந்து யுடிடி தொடரில் பங்கேற்கும் 3-வது நபர் என்ற பெருமையையும் அவர், பெற்றுள்ளார். கிரில் ஜெராசிமென்கோ 3-வது முறையாக யுடிடி தொடரில் விளையாடுகிறார். இதற்கு முன்னர் அவர், சீசன் 3 மற்றும் 4-ல் பங்கேற்றிருந்தார்.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது மோதலில் யு மும்பா டிடி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணிள் மோதுகின்றன. கடந்த சீசனில் யு மும்பா அணி 6-9 என்ற கணக்கில் அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸிடம் தோல் அடைந்திருந்தது. இந்த தோல்விக்கு யு மும்பா அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இதனால் இது மிகவும் கடுமையான மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு மும்பா அணியில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்ஸ் பலம் சேர்க்கக்கூடும். நடப்பு சீசனில் அவர், உயர்தரவரிசை வீராங்கனையாக உள்ளார். அவருக்கு உறுதுணையாக பிரான்ஸ் வீரர் லிலியன் பார்டெட் மற்றும் வளர்ந்து வரும் இந்திய நட்சத்திரம் யஷஸ்வினி கோர்பேட் ஆகியோர் இருப்பார்கள். அகமதாபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 5-10 என்ற கணக்கில் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. எனினும் இந்த ஆட்டத்தில் அகமதாபாத் அணியின் ரிக்கார்டோ வால்டர் கவனம் ஈர்த்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் அய்ஹிகா முகர்ஜியுடன் இணைந்து ரிக்கார்டோ வால்டர் அற்புதமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியிருந்தார். இந்த ஜோடியின் ஆட்டம் இந்த மோதலுக்கு மேலும் சேர்க்கும்.
அணிகள் விவரம் – ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ்: ஃபேன் சிகி (சீனா), கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), பயாஸ் ஜெயின், சுதன்ஷு குரோவர், பொய்மண்டி பைஸ்யா, நிகத் பானு.
கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ்: அட்ரியானா டயஸ் (புயிர்ட்டோ ரிக்கோ), அருணா குவாட்ரி (நைஜீரியா), அங்கூர் பட்டாசார்ஜி, செலினா செல்வகுமார், அனன்யா சண்டே, தீபித் பாட்டீல்.
யு மும்பா டிடி: பெர்னாடெட் சாக்ஸ் (ருமேனியா), லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), யஷஸ்வினி கோர்படே, ஸ்வஸ்திகா கோஷ், ஆகாஷ் பால், அபிநந்த் பிபி.
அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ்: அய்ஹிகா முகர்ஜி, ரிக்கார்டோ வால்தர் (ஜெர்மனி), சினேஹித் சுரவஜ்ஜுலா, ஜியோர்ஜியா பிக்கோலின் (இத்தாலி), திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா, யாஷினி சிவசங்கர்.