டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இத்தனைப் போட்டிகள்தான் ஆடுவேன் என்று பணிச்சுமையைக் குறைக்க பும்ரா முடிவெடுப்பதை விட சில அர்த்தமற்ற ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடாமல் இருக்கலாமே. அவருக்கு பிசிசிஐ இந்தத் தொடர்களிலிருந்து ஓய்வு கொடுக்கலாம் தானே என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பும்ரா மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் ஆடி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறச் செய்வதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
இது தொடர்பாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் எழுதியுள்ள பத்தியில்: “இந்தியா இன்னும் இந்த ஆண்டில் 4 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடப்போகிறது. வெள்ளைப்பந்து தொடர் என்றால் ஆசிய கோப்பை மட்டும்தான் பெரிய தொடர். மற்றபடி ஆஸ்திரேலியாவில் வெள்ளைப்பந்து தொடர், பிறகு நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா இந்தியா வந்து வெள்ளைப்பந்து தொடரில் ஆடுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
இதில் கவாஸ்கர் கூறுவதென்னவெனில், “எது முக்கியம்? ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்திய அணி தகுதி பெறுவதா அல்லது அர்த்தமற்ற இருதரப்பு வெள்ளைப் பந்து தொடர்களில் ஆடிக்கொண்டிருப்பதா? எது முக்கியம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆட வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவின் முன்னணி பவுலர் பும்ரா அவசியம். ஆகவே அக்டோபர் தொடக்கத்திலிருந்து நவம்பர் இறுதி வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்குத்தான் பும்ரா முக்கியம்.
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஒரு மாத கால அவகாசம் உள்ளது. ஆகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிப்பதுதான் சரியானது. இதுதான் லாஜிக், ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதற்குரிய லாஜிக்குடன் செயல்படுகிறது. இந்த லட்சணத்தைத்தான் நாம் நடந்து முடிந்த தொடரில் பார்த்தோமே.
நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் அவர் 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடுவேன் என்று தேர்வாளர்களிடம் கூறிவிட்டார். ஆனால், கடைசி போட்டியில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டுமென்று நிலையில், அவர் ஆட வேண்டியதுதானே என்று விவாதங்கள் கிளம்பின. அதுவும் ஓவலில் ப.சுந்தரை பிட்ச் போடப்பட்டதால் பும்ரா ஆடியிருக்க வேண்டும் என்று சிலர் காட்டமாகவே அபிப்ராயங்களைத் தெரிவித்தனர்.
அடுத்த டெஸ்ட் போட்டி அக்டோபரில்தான். ஆகவே இரண்டு மாத கால ஓய்வு அவருக்கு உள்ளது. பும்ராவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவருக்கு ஓய்வு என்கின்றனர். ஆனால் எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதில்தான் இந்திய அணியின் தேர்வுக்குழு வித்தியாசம் இல்லாமல் மழுங்கி விடுகிறது” என்று சாடியுள்ளார்.