சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் 70-களில் 80-களில் நடித்த அவரது ஆரம்பகாலப் படங்களில் கோபக்கார இளைஞன் (The Angry Young Man) என்ற பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அப்போதைய அரசியல்-சமுக-பொருளாதாரச் சூழலும், பெருகி வரும் ஊழலும் இளைஞர்களை கோபக்காரர்களாக மாற்றியிருந்தது, அந்த உணர்வை அமிதாப் கதாபாத்திரங்களாக ஏற்று நடித்தார். அதே போன்ற ஒரு கோபக்கார இளைஞனாகத்தான் விராட் கோலி கேப்டனானார் என்கிறார் சஞ்சய் பாங்கர்.
இது தொடர்பாக டிடி ஸ்போர்ட்ஸிற்கு அளித்த நேர்காணலில் சஞ்சய் பாங்கர் கூறியதது: விராட் கோலியின் முகத்தில் தெரியும் கோபமும், ஆணவமும் அவரது இயல்பான குணச்சித்திரமே. அவரைப் போன்ற இயல்பான கோபக்காரர்கள் தாங்கள் செய்வது சரியென்றே உணர்வார்கள். அமிதாப் பச்சன் படங்கள் 1975-80-களில் எப்படி ஹிட் ஆனது?. ஏனெனில் அப்போதைய இந்திய சமுதாயத்தில் கோபக்கார இளைஞர் என்ற ஒரு சிந்தனை இருந்து வந்தது. கோபம் எங்கோ கொதித்துக் கொண்டிருந்தது.
இந்திய கிரிக்கெட்டுக்கு அவரைப் போன்ற ஆக்ரோஷ, ஆவேச குணாதிசியம் தேவைப்பட்டது. ஏனெனில் அப்போதுதான் ராகுல் திராவிட், சச்சின், லஷ்மண், சேவாக் ரிட்டையர் ஆன காலக்கட்டம். கோலிதான் இந்திய கிரிக்கெட்டை முன்னேற்றிச் செல்ல வேண்டும். இதை அவர் தனக்கேயுரிய பாணியில் செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறையையே மாற்றி விட்டார். என்றார் சஞ்சய் பாங்கர்.
ஆம் தோனி ரிட்டையர் ஆன கையோடு ஆஸ்திரேலிய தொடரில் எந்த வித தயாரிப்பும் இன்றி உடனடியாக டெஸ்ட் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி அடிலெய்ட் டெஸ்ட்டில் 364 ரன்கள் வெற்றி இலக்கைக் கையில் கொடுத்து சேஸ் செய் என்று மைக்கேல் கிளார்க் கொடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு விரட்டினார். தோல்வி என்றாலும் ஆஸ்திரேலியாவின் வயிற்றில் மோட்டார் ஓடவிட்டார் கோலி, 2 இன்னிங்ஸ்களிலும் அபார சதம். அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவில்லை. 40 டெஸ்ட் வெற்றிகளுடன் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலிதான் என்று கொடி நாட்டிவிட்டுத்தான் சென்றார்.
கேப்டனான போது அளித்த பேட்டியொன்றில் கூறியபோது, ”5 பேட்டர்கள் மற்றும் விக்கெட் கீப்பருக்கு முழு சுதந்திரமும் உரிமையும் அளிக்க வேண்டும். அவர்களே 350-400 ரன்களை எடுக்க வெண்டும். பேட்டர்களுக்கு ஒரு அசிரத்தை ஏற்படும் விதமாக 7வது பேட்டரை அணியில் வைத்திருக்கக் கூடாது.” என்றார் அனைவரும் அசந்து போய்விட்டனர்.
ஏனெனில் அதுவரை 7 பேட்டர்கள், 4 பவுலர்கள் என்ற ஃபார்முலாவில்தான் தோனி வரை கேப்டன்சியில் அணியைத் தேர்வு செய்து வந்தனர். தோனி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு அறிவித்த போது கோலி கேப்டன்சியை எடுத்துக் கொள்ளும் போது இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் 7வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.