ஆசியக் கோப்பை டி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளது, ஏனெனில் நாங்கள் சிறப்பான அணி என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி எந்தக் காலத்திலுமே கணிக்க முடியாத ஒரு அணியே. ஒரு போட்டியில் அசிங்கமாக இப்படியெல்லாம் தோற்க முடியுமா என்று ஆச்சரியப்படுவது போல் தோற்பார்கள், பிறகு இப்படியெல்லாம் வெற்றி பெறவும் முடியுமா என்பது போல் ஆச்சரியமான வெற்றியையும் பெறுவார்கள், எப்போது எது நிகழும் என்பது அவர்களுக்கே தெரியாது.
அன்று வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்றேயாக வேண்டிய போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்று சரிவு கண்டு, பிறகு அவர்கள் பாஷையில், ‘உலகத்தர ஸ்பின்னர் முகமது நவாஸ்’ பேட்டிங்கிலும் முகமது ஹாரிஸ் பேட்டிங்கிலும் மீண்டும் 135 ரன்களை எட்டியது. சரி வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக நன்றாக ஆடியது போல் பாகிஸ்தானை வீழ்த்தி விடுவார்கள் என்று பார்த்தால் ஷாஹின் அஃப்ரீடி, ஹாரிஸ் ரவூஃப்பிடம் மடிந்தனர். ஆனால் வங்கதேச பேட்டிங் அன்று கடும் ஐயங்களை எழுப்பியது, இந்தியா – பாகிஸ்தான் இறுதிதான் வணிக ரீதியாக வெற்றி பெறும் நாமெதற்கு குறுக்காலே என்பது போல் படுமோசமாக ஆடியதாகவே பட்டது.
இப்போது அந்தப் போட்டியின் வெற்றியை வைத்து சல்மான் ஆகா, “இப்படி ஒரு போட்டியை வெல்ல முடிகிறது எனும் போது நாங்கள் ஒரு சிறப்பான அணியே. அனைவரும் நன்றாக ஆடினர். பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.
என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெளிவாக இருக்கிறது. எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் அளவுக்கு நாங்கள் சிறந்த அணியே. ஞாயிறன்று இந்தியாவை வீழ்த்துவோம்.” என்றார்.
என்ன செய்தால் பாகிஸ்தான் வெல்ல முடியும்: ஷோயப் அக்தர் அறிவுரை – இந்திய அணி மீதிருக்கும் ஒளிவட்டத்தை ஒதுக்கி வையுங்கள், ஆக்ரோஷ மனநிலையுடன் இறங்குங்கள். ஒளிவட்டத்தை முறியடியுங்கள். வங்கதேச அணியுடன் ஆடிய மனநிலையுடன் ஆடுங்கள். நீங்கள் 20 ஓவர்கள் வீச வேண்டாம், விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டே இருங்கள்.
என்னுடைய வார்த்தையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அபிஷேக் சர்மாவை 2 ஓவர்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டால் நிச்சயம் இந்திய அணி தட்டுத்தடுமாறும். ஏன் அபிஷேக்கிற்கு எல்லா பந்துகளும் மாட்டி விடுமா என்ன? மிஸ்டைம் செய்ய மாட்டாரா என்ன? நிச்சயம் செய்வார். பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும் என்றால் அவரை வீழ்த்துவதற்காக முழு மூச்சுடன் செயல்படுவது அவசியம். நீங்கள் சவால் அளித்தால் இந்தியா நிச்சயம் ரன்கள் எடுக்க கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்வார்கள்.
பாகிஸ்தான் மோசமான அணியைத் தேர்வு செய்யும், மோசமாக ஆடுவார்கள், ஆனால் பைனல் என்று வந்து விட்டால் உயிரைக்கொடுத்து ஆடுவார்கள், இது கவுதம் கம்பீருக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.