புதுடெல்லி: அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று அந்த நாட்டின் அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி ஆரம்பமாகிறது. இந்நிலையில், அனுபவ வீரர்களான ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வு முடிவு இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் கவுதம் கம்பீர் ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வு முடிவு குறித்து பேசியுள்ளார். “எப்போது விளையாட தொடங்குகிறோம் மற்றும் எப்போது அதனை முடிக்கிறோம் என்பது முற்றிலும் தனிப்பட்ட முடிவு என நான் நினைக்கிறேன். ஒருவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என சொல்லும் அதிகாரம் இங்கு யாருக்கும் இல்லை. அது பயிற்சியாளர், தேர்வாளர் அல்லது தேசத்தில் உள்ள யாராக இருந்தாலும் சரி. ஓய்வு என்கிற முடிவு உள்ளிருந்து வருவது.
நிச்சயம் அவர்கள் இருவரது அனுபவத்தையும் இந்திய அணி மிஸ் செய்யும். இருந்தாலும் இந்த தருணம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும்” என்றார்.