மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை – வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசிஐ-யின் தலைமை அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளதை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார். ‘மிதுன் எனது முன்னிலையில் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்’ என்றார். தற்போது பிசிசிஐ-யின் இடைக்கால தலைவர்க ராஜீவ் ஷுக்லா செயல்பட்டு வருகிறார்.
பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்கொண்டிருந்தார். வரும் 28-ம் தேதி மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்த சூழலில்தான் அந்த பதவிக்கு மிதுன் விண்ணப்பித்துள்ளார். அவர் ஒருவர் மட்டுமே இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். பிசிசிஐ பொருளாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரகுராம் பாட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.
யார் இந்த மிதுன் மன்ஹஸ்? – 45 வயதான மிதுன், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். 1997 முதல் 2017 வரையில் 154 முதல்-தர போட்டிகளில் விளையாடி 9,714 ரன்கள் எடுத்துள்ளார். 130 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 4,126 ரன்களும், 91 டி20 போட்டிகளால் 1,170 ரன்களும் எடுத்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் அணிகளான ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு துணை பயிற்சியாளர் பொறுப்பிலும், வங்கதேச இளையோர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
பிசிசிஐ துணை கமிட்டி குழுவில் அங்கம் வகிக்கும் அவர் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் பணிகளை பார்வையிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அவரது பெயரை பிசிசிஐ நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் முன்மொழிந்துள்ளனர்.