லாஸ் வேகாஸ்: ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி அரை இறுதிக்கு முன்னேறினார். அதேவேளையில் ஆர்.பிரக்ஞானந்தா பட்டம் வெல்வதற்கான வேட்கையில் இருந்து வெளியேறினார்.
ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார். முதல் ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 64-வது நகர்த்தலின் போது டிரா செய்தார்.
2-வது ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன் எரிகைசி 69-வது நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் அர்ஜுன் எரிகைசி 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அர்ஜுன் எரிகைசி படைத்துள்ளார்.
அதேவேளையில் மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 3-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் பட்டம் வெல்வதற்கான வேட்கையில் இருந்து பிரக்ஞானந்தா வெளியேறினார். மற்ற கால் இறுதி ஆட்டங்களில் அமெரிக்காவின் லெவன் அரோனியன், ஹான்ஸ் மோக் நீமன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
லெவன் அரோனியன் 2.5-1.5 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஹிகாரு நகமுராவையும், ஹான்ஸ் மோக் நீமன் 4-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவையும் தோற்கடித்தனர். அரை சுற்றில் அர்ஜுன் எரிகைசி, லெவன் அரோனியனுடன் மோதுகிறார். மற்றொரு அரை இறுதியில் ஹான்ஸ் மோக் நீமன், ஃபேபியானோ கருனாவை சந்திக்கிறார்.