சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.78 ஆயிரத்தை நெருங்கியது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.9,805-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.137 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,37,000 ஆகவும் இருந்தது. தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த மாதம் 25-ம் தேதி முதல் செப்.3-ம் தேதி வரை 9 நாட்களில் பவுனுக்கு ரூ.4,000 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தக் குமார் கூறும்போது, “அமெரிக்காவின் வரிவிதிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் தாக்கத்தால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருக்கும்” என்றார்.