மதுரை: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய தவறை உணர்ந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சட்டத்தை அமல்படுத்தியபோது இது தவறு, இது போன்ற பல்வேறு வரிவிகிதங்களை வைக்காதீர்கள் என்று அப்போதே நாங்கள் அறிவுறுத்தினோம்.
அப்போதைய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியமும் இது தவறு என்று அறிவுறுத்தினார். ஆனால் அன்று பிரதமரோ, நிதியமைச்சரோ மற்ற அமைச்சர்களோ நாங்கள் சொன்னதை கேட்கவில்லை. பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். பல பொருளாதார நிபுணர்கள் இது தவறு, இதை திருத்த வேண்டும் என்று கூறினார்கள்.
இப்போதாவது இது தவறு என்று உணர்ந்து இதை திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை கசக்கி பிழிந்தார். இப்போது வரியை குறைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இதே மக்கள் தானே அதே 18% வரியை கட்டிக் கொண்டிருந்தார். இப்போது இந்த 5% வரி பொருந்தும் என்றால் ஏன் இத்தனை ஆண்டுகள் அது பொருந்தவில்லை? மக்களிடம் இருந்த பணத்தை எல்லாம் வரியாக வசூலித்து இப்போதாவது அவர்களுடைய மனம் திருந்தி, அறிவு தெளிந்து தங்களுடைய தவறை திருத்திக் கொண்டதற்கு பாராட்டுகிறேன்” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் புதன்கிழமை டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதிச் சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.