புது டெல்லி: இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 1.55% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும்.
2025-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவுக்கு, பருப்பு வகைகள், மளிகை பொருட்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, காய்கறிகள், தானியங்கள், கல்வி, முட்டை, சர்க்கரை மற்றும் மிட்டாய் பொருட்களின் பணவீக்கம் குறைந்ததே முக்கிய காரணம் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 2017-இல் சில்லறை பணவீக்கம் 1.46% ஆக இருந்தது. அதன்பின்னர் கடந்த ஜூலையில்தான் 1.55% எனும் அளவுக்கு பணவீக்கம் பதிவாகியுள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 2.1% ஆகவும், மே மாதத்தில் 2.82% ஆகவும் இருந்தது. அதுவே கடந்த ஜூலை 2024-இல் 3.6% ஆக இருந்தது.