புதுடெல்லி: ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கு குறைவான வருவாய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்களவையில் இன்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலின் விவரம்: நாடு முழுவதும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள், பணியாளர்களின் நலன்களுக்கான திட்டம் செயல்படுத்த ப்படவுள்ளது.
இதன்படி, ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் 8,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற, நிதியுதவியுடன் கூடிய ஜவுளித் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு (இரண்டு குழந்தைகள் வரை) ஆண்டுதோறும் 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெசவாளர்களுக்கு குறைந்த செலவில் சமூகப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இயற்கை அல்லது விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நிரந்தர அல்லது பகுதி அளவிலான உடல் ஊனத்திற்கு காப்பீடு வழங்கும் வகையில் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் சுரக்ஷா பீமா காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கடந்த 3 ஆண்டுகளில் பருத்தி நூல், பருத்தி துணி வகைகள், ஆயத்த ஆடைகள், இதர நூல் உட்பட பருத்தி ஏற்றுமதி 35,642 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.