புதுடெல்லி: அதிகரித்து வரும் நிச்சயமற்ற வர்த்தக சூழல்களுக்கு மத்தியில் அரசியல் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளன.
சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இதற்கான திட்டத்தை அறிவித்தார். ஆனால் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என்பது குறித்த விவரங்களை அவர் வழங்கவில்லை.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ள நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா மற்றும் சீனாவுக்கு வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளதால் இருநாடுகளின் பொருளாதாரத்திலும் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், நீண்ட கால போட்டியாளர்களான சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் வலுப்பெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் புதுடெல்லியில் இருதரப்பு வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே வர்த்தகம், முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பிரதமரையும் சந்தித்துப் பேசினார். அப்போது நிலையான முன்னேற்றத்துக்கு ஒருவருக்கொருவர் நலன்களை மதிக்கும் வகையில் வழிநடத்தப்படுவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, சேவைகள் அனுமதிக்கப்பட்டவுடன் 2 நாடுகளுக்கும் இடையே விமானங்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளது. மற்றொரு விமான நிறுவனமான ஏர் இந்தியாவும் இந்த வழித்தடத்தில் மீண்டும் விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.