புதுடெல்லி: 4.08 கோடி போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் நுகர்வோர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் முறையாக எல்பிஜி விநியோகம் மற்றும் மானியங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் அடிப்படையில் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பஹல் திட்டம், ஆதார் அடிப்படையிலான சரிபார்த்தல், பயோமெட்ரிக் அங்கீகாரம், தகுதியற்ற அல்லது போலி இணைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட முன்முயற்சிகளை அமல்படுத்துவதன் மூலமாக மானியங்கள் வழங்கப்படும் முறை சிறப்பாக வலுப்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தும் வகையிலும், சேவையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையிலும் நாடு முழுவதும் எல்பிஜி விநியோக மையங்களில் ஐவிஆர்எஸ், எஸ்எம்எஸ் வாயிலாக சிலிண்டர் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையின் கீழ் சிலிண்டர் பதிவு, கட்டண ரசீது, சிலிண்டர் விநியோகம் குறித்த தகவல்களை குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் நுகர்வோர்கள் பெறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களுக்கான நடவடிக்கைகளை கண்காணித்து தவறு ஏதேனும் நிகழ்ந்தால் புகார் அளிக்க முடியும்.
01.07.2025 வரை 4.08 கோடி எண்ணிக்கையிலான போலி எல்பிஜி இணைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டப்பயனாளிகளில் 67 சதவீதம் பேரின் பயோ மெட்ரிக் ஆதார் அங்கீகாரப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.