தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் 2025- 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.
வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயர் இதை வெளியிட்டார். அதன் விவரம்: 2025- 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 9.86 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.98,923 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ.53,803 கோடியாக உயர்ந்துள்ளது. கடன்களின் மொத்த தொகை 10.44 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.45,120 கோடியாக உள்ளது.
வங்கியின் நிகர மதிப்பு ரூ.9,328 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் இது ரூ.8,244 கோடியாக இருந்தது. வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இதே முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.287 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் ரூ.567 கோடியில் இருந்து, ரூ.580 கோடியாக உயர்ந்துள்ளது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 1.44 சதவீதத்தில் இருந்து 1.22 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.65 சதவீதத்தில் இருந்து 0.33 சதவீதமாகவும் குறைந்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.520.63-ல் இருந்து ரூ.589.09 ஆக அதிகரித்துள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் சில்லறை, விவசாயம், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் கடன் தொகை ரூ.37,614 கோடியில் இருந்து ரூ.42,100 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, முதல் காலாண்டில் 7 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மனிதவள செயல்பாடுகளை தவிர்த்து, வங்கி முழுவதும் செலவு கட்டுப்பாட்டுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனையாளர் மேலாண்மை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக டிஜிட்டல் மற்றும் செயல்முறை சார்ந்த வங்கியாக மாறும் நோக்கத்தில் வணிக செயல்முறை மேலாண்மையையும் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.