பெங்களூரு: டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 2026-ம் நிதியாண்டில் தங்களது நிறுவனத்தில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க முடிவெடுத்துள்ளது. இதன் விளைவாக 12 ஆயிரத்து 200 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறும்போது, “டிசிஎஸ் நிறுவனத்தின் திடீர் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. 12 ஆயிரம் ஊழியர்கள் என்பது மிகவும் பெரிய எண்ணிக்கை. இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுதவிர, அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தொழிலாளர் நல சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.