மும்பை: 2025-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் 68 வயதான முகேஷ் அம்பானி. இந்நிலையில், அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.9.55 லட்சம் கோடியாக உள்ளது என ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.8.15 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
இந்திய நாட்டின் பணக்கார பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.2.84 லட்சம் கோடியாக உள்ளது.
இதே போல இந்தியாவில் நூறு கோடிக்கு மேல் சொத்துமதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஹுருன் இந்தியா பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நூறு கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 350-னை கடந்துள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு ரூ.167 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பில்லியனர்கள் அதிகமானோர் வசிக்கும் நகரமாக மும்பை அமைந்துள்ளது.