மும்பை: அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்ததை தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகளின் விலை ஒரு சதவீதம் முதல் 13 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்ததாகவும், கணக்கு வழக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஜனவரியில் குற்றம் சாட்டியது. இதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்தது.
இந்நிலையில், அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை செபி முற்றிலும் நிராகரித்து, எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது. செபியின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்ததால், அதானி பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, அதானி குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு நேற்றைய ஒரே வர்த்தக தினத்தில் மட்டும் ரூ.69,000 கோடிக்கும் அதிகமாக ஏற்றம் கண்டது.
அதன்படி, அதானி டோட்டல் காஸ் பங்கின் விலை 7.35%, அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை 5.04%, அதானி பவர் 12.40%, அதானி போர்ட்ஸ் 1.09%, அதானி கிரீன் எனர்ஜி 5.33%, அதானி எனர்ஜி சொலு யூஷன்ஸ் 4.70% ஏற்றம் கண்டன.
திரிணமூல் எம்.பி. கிண்டலுக்கு அதானி குழும தலைமை நிதி அதிகாரி பதிலடி: அதானி குழுமத்தை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் செபி விடுவித்துள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அதற்கு எதிராக கிண்டலடிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆஹா. அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அதானி குழுமத்தை செபி விடுவித்துவிட்டதா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் ராபி சிங் உடனடியாக எதிர்வினையாற்றி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்புக்குரிய எம்.பி. அவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான துர்கா பூஜை வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.