மும்பை: ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்துக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, அது உலக அளவில் கனவு காணும் இந்திய நிறுவனங்களின் துணிச்சலுக்கு விடப்பட்ட நேரடி சவால் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஆதானி குழும பங்குதாரர்களுக்கு கவுதம் அதானி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 2023, ஜனவரி 24ம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் தலால் தெருவுக்கு அப்பால் எதிரொலிக்கும் தலைப்புச் செய்திகளுடன் விழித்தெழுந்த ஒரு காலைப்பொழுதாக நினைவுகூறப்படும். அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்துக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, அது உலக அளவில் கனவு காணும் இந்திய நிறுவனங்களின் துணிச்சலுக்கு விடப்பட்ட நேரடி சவால்.
அதானி குழுமத்தைப் பொறுத்தவரை, இது எங்கள் மீள்தன்மையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் தாண்டிய ஒரு சோதனையின் தொடக்கமாக இருந்தது. இது எங்கள் நிர்வாகம் மற்றும் நோக்கத்தை கேள்விக்குட்படுத்தியது. அதோடு, இந்திய நிறுவனங்களின் உலக அளவிலான லட்சியத்தையும் கேள்விக்கு உட்படுத்தியது.
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழுமத்தை செபி கடந்த 18ம் தேதி விடுவித்தது. வாய்மையே வெல்லும் என்ற இறுதி வார்த்தைகளுடன் செபி தெரிவித்த கருத்து, நாங்கள் எப்போதும் கூறுவதையே எதிரொலித்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமம், அசாதாரண வளர்ச்சியைப் பெற்று வருகிறது. அதானி குழுமத்தின் செயல்பாட்டு லாபம் 25%ஐ எட்டியுள்ளது. 2022-23 நிதி ஆண்டில் ரூ.57,205 கோடியாக இருந்த குழுமத்தின் மதிப்பு 2024-25ல் ரூ.89,804 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 57% வளர்ச்சியாகும்.
எங்களுக்கு தீங்கு விளைவிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சி, எங்கள் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு திருப்புமுனையாக மாறியது. உங்கள் நம்பிக்கையே எங்களை நிலைநிறுத்தியது. உங்கள் பொறுமையே எங்களை தாங்கிப் பிடித்தது. உங்கள் நம்பிக்கைதான் எங்களுக்கு தைரியம் கொடுத்தது. இந்த அசாதாரண ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.