விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகச் செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், தென்னை, பருத்தி, வாழை, கரும்பு, நெற்பயிர், புளி, மா, பனை, கீரை வகைகளை அதிகமாகப் பயிரிட்டு வருகின்றனர். தமிழகத்தில் விவசாய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால், பெரும்பான்மையான விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி தான் பாரம்பரிய விவசாய தொழிலைச் செய்து வருகின்றனர்.
குறிப்பாக வேளாண் பயிர்களை விளைவிக்க பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தனி நபர்களிடம் வட்டியைக் கூட கணக்கு பார்க்காமல் கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு நீண்ட காலம் ஆகிறது. இந்த கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் ஒவ்வொரு விவசாயியும் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் பயிர்க் கடன் பெற பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்து, கடன் தொகை வாங்கி வந்த விவசாயிகளு க்கு பொதுத்துறை வங்கிகளில் உடனடி கடன் கிடைக்காததால், தனிநபர் மூலமாகவும், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற வேண்டுமென்றால், பல்வேறு புதிய நிபந்தனைகளை அரசு கொண்டு வந்துள்ளதால் வங்கிக் கடன் தொகையை நம்பி விவசாயம் செய்யும் ஏராளமான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய அறிவிப்புகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் செய்வதற்கும், உரங்கள் வாங்கவும், விதைகள் வாங்கவும், கூலியாட்களுக்குச் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகப் பலரிடம் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
வேளாண் பயிர்களை அறுவடை செய்த பிறகு வாங்கிய கடன்களை அடைத்தாலும், அடுத்த சாகுபடிக்கு மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை தான் இன்றளவும் உள்ளது. பயிர்க்கடன் வாங்குவதில் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களையே அதிகமாக நம்புகிறோம்.
இதில்,கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் கடன்கள் வாங்குவதற்குப் பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக விவசாயிகள் கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி எங்களை நிலைகுலையச் செய்துள்ளது.
இதில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் போதிய படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கு சிபில் ஸ்கோர் தொடர்பான நடைமுறைகள் அறிந்து இருப்பது கடினம். மேலும் விவசாயிகள் தங்களது கடனை தாமதமாகக் கட்டினால், அடுத்த முறை அவர் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளி இடங்கள், தனி நபர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன்பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் தேவை என்ற நிபந்தனை உடனடியாக நீக்கி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் தேவை என்ற நிபந்தனையை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த விதமான உத்தரவும் எங்களுக்கு வரவில்லை இது தொடர்பாக நாங்களும் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் குறித்து எதுவும் கேட்பதில்லை” என்றனர்.