பொங்கல் பண்டிகையின்போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், 1 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மாத வேலையிழப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2026 ஜனவரி பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்காக வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை கடந்த ஏப்ரலில் வெளியானது. மேலும், வேட்டி உற்பத்திக்கான நூல் விசைத் தறியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து உற்பத்தி பணியை விசைத்தறியாளர்கள் தொடங்கியுள்ளனர். சேலைக்கான நூல் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே, கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவான எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்திக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 248 விசைத் தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் மூலம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், கடந்த (2024) ஆண்டு தலா 1.77 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தாண்டு பழைய இருப்புகள் போக, 1.44 கோடி வேட்டி மற்றும் 1.46 கோடி சேலை உற்பத்தி செய்யப்படும் என கடந்த ஏப்ரலில் வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, சமீபத்தில் வெளியிடப்பட்ட உற்பத்தி ஆணையில், 1.66 ஆயிரம் சேலை மற்றும் 1.28 கோடி வேட்டி மட்டும் உற்பத்தி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2024) வழங்கப்பட்ட ஆர்டருடன் ஒப்பிடும்போது 76 லட்சம் சேலைகள் குறைந்துள்ளது. மேலும் ஏப்ரலில் (2025) வெளியான அரசாணையுடன் ஒப்பிடும்போது 46 லட்சம் சேலைகள் குறைந்துள்ளது.
அதேபோல, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 48 லட்சம் வேட்டி எண்ணிக்கையும், கடந்த ஏப்ரல் மாத அரசாணையுடன் ஒப்பிடும்போது 15 லட்சம் வேட்டி உற்பத்தியும் குறைந்துள்ளது. அரசின் இந்நடவடிக்கையால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் 2 மாத வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், விசைத்தறி சார்ந்த இதர தொழில்களில் ஈடுபடும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி மூலம் பயன்பெறுவார்கள் என அரசு அறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால், உற்பத்தி ஆணையின் மூலம் 26 ஆயிரத்து 300 விசைத்தறிகளுக்கு மட்டுமே பணி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்