நாமக்கல்: அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து அந்நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இது நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களை கவலையடைச் செய்துள்ளது.
நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த வர்த்தகத்தின் புதிய தொடக்கமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அரசு இந்திய முட்டை இறக்குமதிக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் அமெரிக்காவுக்கு நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. குளிர்சாதன வசதி கொண்ட 21 கண்டெய்னர்களில் தலா 4.75 லட்சம் முட்டைகள் வீதம் 1 கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கண்டெய்னர் 30 நாட்களில் அமெரிக்கா சென்றடைந்தது. தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இச்சூழலில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இது முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் இந்த வரி விதிப்பு காரணமாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதியும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
வரி விதிப்பு காரணமாக இந்திய முட்டைகளை வாங்க அங்குள்ள வியாபாரிகள் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணமாகவும் தெரிவிக்கப் படுகிறது. இதனால் முட்டை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதாக நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், ”அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அதன் காரணமாக அவர்கள் இந்திய முட்டையை இறக்குமதி செய்தனர். தற்போது பாதிப்பில் இருந்து அங்குள்ள கோழிப் பண்ணையாளர்கள் மீண்டு வந்துள்ளனர்.
கடந்த மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் 10 சதவீதம் முட்டை உற்பத்தி அங்கு அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்திய முட்டையை இறக்குமதி செய்யவில்லை.
துருக்கியிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அதன் காரணமாகத் தான் இந்திய முட்டையை அவர்கள் இறக்குமதி செய்தனர். தற்போது அமெரிக்காவில் முட்டை உற்பத்தி அதிகரித்ததால் இந்திய முட்டை இறக்குமதிக்கு அவசியம் ஏற்படவில்லை. வரி உயர்வும் இந்திய முட்டை ஏற்றுமதி தடைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.