சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 என குறைந்துள்ளது. புதிய விலை செப்டம்பர் 1-ம் தேதி முதலே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டேன், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
இவற்றுக்கான விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பர் 1-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்தது. இதை விலையை மாற்றி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதிய விலையின்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் டெல்லியில் ரூ.1,580-க்கு விற்பனை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகும்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டரின் விலையை தொடர்ந்து குறைத்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி ரூ.33.50, ஜூலை 1-ம் தேதி ரூ.58.50, ஜூன் மாதம் 1-ம் தேதி ரூ.24 என விலை குறைந்தது.
இந்தியாவின் ஒட்டுமொத்த எல்பிஜி பயன்பாட்டில் 90 சதவீத பங்கை வீட்டு உபயோக தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சிலிண்டர்கள் கொண்டுள்ளனர். வணிக சிலண்டரின் விலையில் மாற்றம் இருந்தாலும் வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி நிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.