சென்னை: வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி, செலவுகளை குறைக்க உதவும் வகையில், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு, சென்னையில் ஆக.9-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் உதவும் வகையில், தொழில்முனைவோர் சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஆகியோருக்கான ஒருநாள் சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
முக்கிய பயிற்சிகள்: இப்பயிற்சி வகுப்பில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வணிக தேவைகளுக்கு பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதுதல், இலக்குகளை நிர்ணயித்தல், மார்க்கெட்டிங், பிராண்டிங், சமூக ஊடக திட்டமிடல், பகுப்பாய்வு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான கருப்பொருளை உருவாக்குதல், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கற்றுக் கொடுக்கப்படும்.
அதேபோல், பயிற்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட சாட்ஜிபிடி ப்ராம்ப்ட்டுகளுடன் கூடிய பிரத்யேக மின் புத்தகத்துடன், வழிகாட்டுதல்களை பெற வாட்ஸ்அப் சமூக அணுகலும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை www.ediitn.in என்ற இணையதளத்தையும், 95437 73337 மற்றும் 93602 21280 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.